பிரிட்டன் உள்துறை செயலர் ஒரு தொலைபேசி அழைப்பால், பல அதிரடி நடவடிக்கைகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிரிட்டன் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேல் பிரபல தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், கூறியுள்ளதாவது, கடந்த ஞாயிற்று கிழமை அன்று மாலையில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அதிர்ச்சி தகவலை கூறினர்.
அதாவது, பிரான்ஸின் வடக்கு பகுதியில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகளை பிரிட்டன் அழைத்து செல்கிறோம் என்று ஏமாற்றி கடத்தல்காரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். அதன்பின்பு, சிறுமிகளின் பெற்றோரை மட்டும் ஒரு படகில் ஏற்றி விட்டு, 2 இளம்பெண்களையும் பிறகு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.
எனினும் அந்த பெற்றோர் பிள்ளைகளையும் தங்களோடு அனுப்புமாறு கேட்க, அவர்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள். அங்கு சென்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலையை எண்ணி வருத்தத்தில் பதற்றத்துடன் பிரிட்டன் வந்திருக்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் தங்கள் மகள்களை பார்க்க முடியவில்லை.
இந்த அதிர வைக்கும் அலைபேசி தகவலால், ப்ரீத்தி பட்டேல் அதிரடி நடவடிக்கைகளை கையாள முடிவெடுத்துள்ளார். அதன் படி எல்லை பாதுகாப்பு படையினருக்கு புலம்பெயர்ந்த படகுகளை திருப்பி அனுப்பக்கூடிய அதிகாரத்தை அளிக்கவுள்ளார். இதன்படி எல்லை பாதுகாப்பு படையினருக்கு படகுகளை கைப்பற்றவும், படகிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை கட்டாயமாக இறக்குவதற்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்குள் புகுந்தால் கிரிமினல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் புலம்பெயர்ந்தவர்கள் சிலரை ஏற்பதற்கு சரியான காரணம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பிரிட்டனில் 30 மாதங்கள் தற்காலிகமாக தங்கலாம்.
ஆனால், அவர்களின் உறவினர்களை இங்கு அழைத்து வர முடியாது. அதேசமயத்தில் பிரிட்டன் நாட்டிற்குள் சட்டப்படி வர முயற்சிப்பவர்கள் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டால், நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவர். அவர்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.