பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரான்சில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு செல்வோர் தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவக உரிமையாளர்களும், பெற்றோர்களும், மருத்துவமனை ஊழியர்களும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த புதிய விதிகளை எதிர்த்து பேரணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் அந்தப் பேரணியில் சுதந்திரம் சுதந்திரம் என்று முழங்கியபடி பொதுமக்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் அவர்களை நோக்கி வீசியுள்ளனர். அப்போது அந்த கண்ணீர் புகை குண்டுகளை பேரணியில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை நோக்கி காலால் உதைத்து தள்ளிவிட்டனர். இதன் காரணமாக தலைநகரில் போர்களம் உருவானது. இதற்கிடையே பிரான்ஸ் மக்களை பிரிக்க தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் உறுதியளித்தார்.
இருப்பினும் ஜூலை மாதம் பாதிக்குமேல் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலந்து கொள்ளும் போது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரம் அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர், மதுபான விடுதிகளுக்கோ அல்லது உணவகங்களுக்கோ செல்வோர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பிசிஆர் முறையில் செய்யப்பட்ட பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை வைத்திருந்தால் மட்டுமே கட்டாயம் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து முதியோர் இல்ல ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறினால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் எதிர்த்து தான் மக்கள் இந்த பேரணியை நடத்தியுள்ளனர். அந்த பேரணி போர்க்களமாக மாறி பாரீஸில் பற்றி எரிய துவங்கியுள்ளது.