தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டியில் உள்ள செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தின் முன்பு பணத்தை மீட்டு தரக்கோரியும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் ரேஷன் கார்டுகளை தாசில்தாரிடம் ஒப்படைப்பதாக கூறினர். இதனையடுத்து தாசில்தார் கீதாராணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.