மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த தண்ணீர் 12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் தனஜீசவந்த் கூறுகையில், அணைகளை நண்டுகள் அரித்து சேதப்படுத்தியதாகவும் , அதன் காரணமாகவே அணை உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஜிதேந்திர அவ்கட் தனது தொண்டர்களுடன் நண்டுகளை பிடித்துக் கொண்டு கோலாப்பூர் காவல் நிலையம் சென்றார்.
மேலும் ரத்னகிரி மாநில நிதியமைச்சர் கூறியபடி, அணை உடைய காரணமாக இருந்த நண்டுகள் இவை தான் என்றும்,இவற்றின் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்குமாறும் புகார் மனு அளித்தனர். காவல் நிலையத்திற்குள் நண்டுகளுடன் சென்று அவற்றை சிறையில் அடைக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.