கிருஷ்ணகிரியில் 2 ஆம் வகுப்பு மாணவி லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை அடுத்த ஜொ.கரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் வனிதா. அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் மாதவனின் அண்ணனான சிவண்ணா. இவரது மகள் சௌந்தர்யா. கெலமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரது தாத்தா பசப்பா என்பவர் சௌந்தர்யா வனிதா ஆகியோரை பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்று உள்ளார். அப்போது ஜொ.கரப்பள்ளியின் கூட்டுரோடு அருகே லாரி ஒன்று வேகமாக வந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வனிதா லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தாத்தாவும் பேத்தி சௌந்தர்யாவும் படுகாயமடைந்தனர்.
பின் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஊர்மக்கள் அனுப்பிவைத்தனர். இதையடுத்து உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர். பின் இப்பகுதியில் லாரிகள் மின்னல் வேகத்தில் சென்று அடிக்கடி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேல் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரமான காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இப்பகுதியில் லாரிகள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானம் அடைந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.