பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த பத்தாம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை கிராமத்தில் வசித்து வரும் தர்மராஜ் என்பவருடைய மகன் பெரியசாமி ( 15 ) பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியான அன்னக்கொடியை பார்ப்பதற்காக செங்குணம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராமத்தின் ஊர் எல்லையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நேற்று பெரியசாமி சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அதில் அந்த மாணவன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மாணவன் கிடைக்கவில்லை. மேலும் அவருடைய நிலைமை என்ன ? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அதனைத் தொடர்ந்து 4 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் நீண்ட நேர தேடலுக்குப் பின்னர் பெரியசாமியை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.