தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி உருவாக்கியுள்ள இஸ்திரி வண்டி இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குபவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது எனப்படும் “எர்த்ஷாட்” பரிசினை வழங்குகிறார். மேலும் அந்த விருதுக்கு ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் பவுண்ட் (ரூ.10 கோடி) பரிசு வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்காக 15 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இளவரசர் வில்லியம் கடந்த மாதம் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிக்கா, நைஜீரியா, சீனா, வங்காளதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த இறுதி பட்டியலில் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் (14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி ரூபாய் 40 ஆயிரம் செலவில் உருவாகியுள்ள சோலார் மின் சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டி கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
இந்த புதிய உருவாக்கத்தின் மூலம் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் வினிஷா உமாசங்கர் ஏராளமான பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியா மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார். அதேபோல் வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் அமைப்பு ஒன்றை டெல்லியை சேர்ந்த வித்யுத் மோகன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வகையில் வித்யுத் மோகன் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளார். ஆகவே சுற்றுச்சூழல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் அவரது படைப்பும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து வருகின்ற 17-ஆம் தேதி லண்டனின் அலெக்ஸாண்ட்ரா மாளிகையில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் வித்யுத் மோகன், வினிஷா உமாசங்கர் உள்ளிட்டோரும் காணொளி மூலம் பங்கேற்க உள்ளனர்.