பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் அப்துல் ஹக்கீம்(20). இவர் துறையூர்- முசிறி சாலையில் உள்ள கண்ணனூர் பகுதியில் இயங்கும் இமயம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அப்துல் ஹக்கீம், கடந்த சில நாள்களாக கல்லூரி, விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். இது குறித்து விடுதிக் காப்பாளராக பணிபுரிந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவைச் சேர்ந்த வெங்கட்ராமன் (45), அப்துல் ஹக்கீமின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் விடுப்பில் வீட்டிற்குச் சென்ற அப்துல் ஹக்கீமை, அவரது தந்தை அப்துல் ரகுமான் திட்டியுள்ளார். தான் விடுதிக்கு வராதது குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்த காப்பாளர் வெங்கட்ராமன் மீது ஹக்கீம் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாணவர் அப்துல் ஹக்கீம், தனி அறையில் இருந்த விடுதி காப்பாளர் வெங்கட்ராமனை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் வெங்கட்ராமன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்த சக மாணவர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பிரிசோதித்த மருத்துவர்கள், விடுதி காப்பாளர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த ஜம்புநாதபுரம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விடுதியில் இருந்த மாணவர் அப்தல் ஹக்கீமை கைது செய்தனர்.