ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரியில் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல், தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க கோரி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு கீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்களின் போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாணவர்கள் கூறும்போது, தமிழக அரசின் அறிவிப்பில் இக்கல்லூரியின் கல்வி கட்டணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், கல்லூரியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உரிய கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து 52 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.