10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாதிரி வினாத்தாளிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என அரசு தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ 10, 11 ,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்விற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து பாடம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். அதனடிப்படையில் மாணவர்கள் புத்தகம் முழுவதையும் படித்து, புரிந்துகொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
காலக் கட்டமைப்பு இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்தில் இருந்தும் எந்த வகையிலும் (வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இன்றி) கேட்கப்படலாம். வினாத்தாள் என்பது வினாத்தாள் வடிவமைப்புப் பகுதி, பிரிவுகள், மதிப்பெண் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளைத்தான் கேட்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருப் பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும், ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்த ஒரு வடிவிலும் இருக்கும் என்பதையும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
வினாத்தாள் கட்டமைப்பு தேவை இல்லை என்பது அரசின் கொள்கை முடிவாகும். மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்கள் ஆசிரியர்கள் உரிமை கோர முடியாது. மாதிரி வினாத்தாள், வினாத்தாள் வடிவமைப்பிற்காக மட்டுமே வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரை, ப்ளூ பிரின்ட் இருந்ததால் கட்டமைப்பு மாற்றமின்றி வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால், புதிய பாடத் திட்டத்தில் கட்டமைப்பு இல்லாததால் எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம் ‘ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், மாணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, தற்போது விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவால் அந்த வினாத்தாள் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.