உபா திருத்த சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதனை ஏற்கவே முடியாது என்றும் மாநிலங்களவையில் வைகோ பேசினார் .
மாநிலங்களவையில் உபா திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, சிறுபான்மையினரின் குரலை கொடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உபா திருத்த சட்டம் மேலும் உதவுவதாகவும் தெரிவித்தார்.
அவசர நிலை காலத்தில் இவ்வகையான சட்டங்களின் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பொடா சட்டத்தை கொண்டு வந்தார். அதை எதிர்த்து இதே மாநிலங்களவையில் தான் பேசியதாகவும், பொடா சட்டத்தை எதிர்த்து பேசியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே எம்பி தான் மட்டுமே என்றும் வைகோ பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போதும் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் சுதந்திரத்திற்கு பின் தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரே நபர் நான் மட்டும்தான் என்று வைகோ தெரிவித்தார். மனித உரிமைப் போராளிகளுக்கும், அரசியல் போராளிகளுக்கும் எதிராக உபா திருத்தச்சட்டம் அமைந்துள்ளதாக கூறி, இவ்வகையான சட்டத்தை ஏற்கவே முடியாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என்றும் உபா திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்துப் பேசினார்.