சப்-இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை தாக்கியதோடு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் அபிநயா என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் விவாகரத்து வழக்கை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பார்த்திபன் என்பவரின் தம்பியான வழக்கறிஞர் நடத்தி வந்துள்ளார். அப்போது அபிநயாவிற்கும், பார்த்திபனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை பார்த்திபன் அபிநயாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் அபிநயாவை பார்த்திபன் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவர் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு பார்த்திபன் தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அபிநயா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டரான பார்த்திபனை கைது செய்துள்ளனர்.