காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் மளிகை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று தனது நண்பரான சிவன் பாபு மற்றும் ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் மூவரையும் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினருக்கும் முருகேசனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த நண்பர்கள் முருகேசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் காவல்துறையினர் முருகேசனை தாக்கிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்பிறகு முருகேசனின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டரான பெரிய சாமியின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 3 காவலரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.