போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள்ள காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக முஸ்தபா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் காந்தல் புதுநகர் பகுதியில் வசிக்கும் மாகி என்ற பெண்ணிற்கும் முஸ்தபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. மேலும் இந்த பெண்ணிற்கு திருமணமாகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாகி முஸ்தப்பாவிடம் செலவுக்கு பணம் கேட்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முஸ்தபா மாகியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். அதன்பின் முஸ்தப்பா மாகியின் உடலை துணியால் சுற்றி புதுநகர் பகுதியில் இருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்களிடம் மாகி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக முஸ்தபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊட்டி நகரம் மேற்கு காவல் நிலையத்தில் மாகியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயர் அதிகாரிகள் முஸ்தப்பாவிடம் நடத்திய விசாரணையில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மாகியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முஸ்தபாவை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.