சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் கடுமையாக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாட்கள் ( ஜூன் 30ஆம் தேதி வரை ) பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில்,கடந்த ஊரடங்கில் அறிவுரை சொல்லி அனுப்பினோம். இருந்தும் பலர் கடைபிடிக்க வில்லை. அதனால் கடைசி நேரத்தில் நிறைய வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டியது இருந்தது.
இந்த முறை ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும். பொது மக்களுக்கு நோயின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது, இதன் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியும். இதனால் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று நம்புகிறேன். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு நூதன தண்டனை ஏதும் கிடையாது.
சட்டப் படி நடப்போம், தண்டனை கொடுக்க அதிகாரம் நமக்கு இல்லை. ஏமாற்றம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறை எல்லா ஏரியாவிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ்ல இருப்பாங்க என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.