போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அவலூர் பேட்டை காவல் நிலையத்தில் இளங்கோவன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்துமதி தனது தாய் மற்றும் உறவினர்கள் உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது கடந்த 2019-ஆம் ஆண்டு தனக்கும் இளங்கோவனுக்கும் திருமணம் நடைபெற்றதாக அவர் போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருமணமான 8 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
மேலும் இளங்கோவன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால் இந்துமதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு இளங்கோவன் இந்துமதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி இளங்கோவனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இந்துமதி போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் வாழ்வதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.