சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடின்றி வறுமையில் வாழ்ந்து வரும் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டம் வரவு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (93) சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். தனது குடும்ப வறுமை காரணமாக பிழைப்புத் தேடி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு உணவகத்தில் கூலி வேலை செய்துள்ளார்.
தன் தாய்நாடு மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த காரணத்தினால் அகிம்சை வழியில் போராட மனம் இல்லாததால் தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐஎன்ஏ படையில் தன்னை இணைத்துக்கொண்டார். பர்மாவில் ஆறு மாத கால பயிற்சி எடுத்துக்கொண்ட இவர் ஆங்கிலேயே படையினருடன் போரிட்டபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்றார்.
இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தியாகி ரங்கசாமியின் மனைவி உயிரிழந்த பின்பு, குடியிருந்த வீட்டை பராமரிக்க பணம் இல்லாததால் அதனை இடித்துவிட்டு தற்பொழுது குடியிருக்க வீடு இல்லாமல் தனது மாற்றுத்திறனாளி மகளுடன் வரவுபாடி கிராமத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்துவருகிறார்.
தனக்கு வீடு வழங்கிட வேண்டுமென்றும், வாரிசுக்கு அரசுப்பணி வேண்டுமென்றும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இவரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் செவிசாய்க்கவில்லை என அவர் வேதனையோடு தெரிவித்தார். இவருக்கு தற்போது மாநில அரசின் உதவித் தொகை மட்டுமே கிடைக்கிறது.
மத்திய அரசின் உதவித் தொகை கிடைத்தால் வறுமையிலிருந்து மீள முடியுமென வருத்தத்தோடு தெரிவித்தார். மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மட்டுமே என்னைப் போன்றோர் கௌரவிக்கப்படுகிறார்கள் எனவும் இதர நாட்களில் அரசு அலுவலர்கள் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் வறுமையில் இருக்கிறார்கள். என்னைப் போன்றோரை கௌரவப்படுத்தவில்லை என்றாலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும் என அவர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.