“முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே’ என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர்கள் பலர் இருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் கூட்டிலிருந்து இறை தேடி செல்லும் பறவை தனக்கு தேவையானது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சிறகை விரிக்க தொடங்குகிறது . நம்பிக்கையை வெற்றியின் முதல் படி .
வெற்றியாளர்கள் மட்டுமல்ல, எவருக்கும் முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை.
பிறந்த குழந்தை, தவழ முயற்சிக்கிறது; பின்னர் நடக்க முயற்சிக்கிறது; பேச முயற்சிக்கிறது; இப்படி ஒவ்வொரு முயற்சியும்தான் அக்குழந்தையை வளர வைக்கிறது. இவையனைத்தும் குழந்தைகள், தங்களது பெற்றோர்களைப் பார்த்து அப்படியே பிரதிபலிக்கின்றனர். Children learn by imitation என்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகும், வாழ்க்கை முழுவதும் பிறரின் பிரதிபலிப்பாயிருந்தால் தோல்வி. வாழ்வெல்லாம் முயற்சியானால் வெற்றி.
இராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க நாட்டு கவிஞர் ஒரு முறை ஒரு காட்டினில் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றார். நடுக்காட்டில் அப்பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதை மனிதர்கள் அடிக்கடி பயணித்த, தெளிவான பாதை.
மற்றொன்று அடிக்கடி பயணிக்காத காய்ந்த சருகுகளால் மூடியிருந்த தெளிவற்ற பாதை. அதிகம் பயணிக்காத இரண்டாது பாதையில் பயணித்தார். அப்புதிய முயற்சியினால் புதிய அனுபவம் கிடைத்தது. அற்புதக் கவிதைகளை அகிலத்திற்கும் தந்தார். The Road Not Taken என்னும் அக்கவிதையில், “அதிகம் பயணிக்காத பாதைகளில் நடக்க கற்றுக்கொண்டவர் வாழ்க்கை, அதிகம் வாசிக்கப்படும்’ என்கிறார். தனது புகழுக்கு காரணம் புது முயற்சியே என்கிறார்.