அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார்.
அவரின் நீண்டகால ஆசைப்படியே அவரின் தோட்டத்தில் இந்தாண்டு ஒரு மிகப்பெரிய ராட்ச பூசணிக்காய் வளர்ந்தது.சுமார் 412 கிலோ கொண்ட அந்த பூசணிக்காயை கண்டு ஜஸ்டின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.முதலில் பெரிய பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என்ற அவரின் ஆசை , பெரிய பூசணிக்காவை பார்த்ததும் இதை வைத்து ஏதேனும் புதிதாக , வித்தியாசமாக செய்ய வேண்டுமென்று அவரின் மனம் பாய்ந்தது.
இதையே தொடர்ந்து யோசித்துக் கொண்டு இருந்த ஜஸ்டினுக்கு புதிய யோசனை பிறந்தது.அதில் அவரின் பண்ணையில் உள்ள ஒரு குளத்தில் பூசணிக்காயில் பயணம் செய்யும் வகையில் அதில் இருக்கைகள் அமைத்து நூதன சவாரி செய்யும் வகையில் பூசணிக்காயை வடிவமைத்தார். பின்னர் அதை முழுமையாக உருவாக்கிய ஜஸ்டின் அந்த பூசணிக்காயை குளத்திற்குள் போட்டு அதில் ஒரு துடுப்புடன் அமர்ந்துகொண்டு படகு சவாரி செய்துள்ளார்.
ஜஸ்டினின் இந்த பூசணிக்காய் சவாரியை அவரின் மனைவி கிறிஸ்டின் ஓன்பி (Christin Ownby) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் ‘பூசணிக்காய் சவாரி’ காணொலி பெருமளவில் வைரலாகி வருகிறது.