தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தை கிருஷ்ணா நேற்று முன்தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த கிருஷ்ணாவுக்கு 80 வயது ஆகும் நிலையில், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 50 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் நிலைத்திருந்த கிருஷ்ணா தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர். இந்த வருடம் முழுவதும் நடிகர் மகேஷ்பாபுக்கு தீராத துயரம் நிறைந்த ஆண்டாகவே மாறிவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு (56) உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து நேற்று மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவும் மரணம் அடைந்து விட்டார். இப்படி ஒரே வருடத்தில் அடுத்தடுத்த சில மாதங்களில் அண்ணன், தாய், தந்தை என மூன்று உறவுகளை இழந்து தவிக்கிறார் மகேஷ் பாபு. தன்னுடைய உறவுகளை இழந்த மகேஷ் பாபு மீளா துயரில் தவித்து வருகிறார். மேலும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.