சிவகங்கை அருகே கணவன் இறந்தபின் சொந்தக்காரர்கள் செய்த டார்ச்சரால் தாய், தனது பிள்ளைகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை அடுத்த சிதம்பரநாதபுரம் தெருவில் வசித்து வந்தவர் ராமதாஸ். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகள் இரண்டு மகன்கள் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ராமதாஸின் பெரியம்மாள் வசந்தி என்பவரது வீட்டின் மாடிப் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
ராமதாஸ் இறந்து நான்கு மாதங்கள் கூட தாண்டாத நிலையில், வீட்டை காலி செய்யுமாறு வசந்தி, பிரியதர்ஷினியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வசந்தி தனது தம்பியையும், தம்பியின் நண்பர் ஒருவரையும் அழைத்து வீட்டை காலி செய்ய சொல்லி அசிங்கமாக திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி தனது பிள்ளைகள் மூன்று பேருக்கும் காப்பியில் விஷம் மற்றும் எலி மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்ததுடன், தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின் இதுகுறித்து அக்கபக்கத்தினருக்கு தகவல் தெரியவர, அவர்கள் பிரியதர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நடந்தவற்றைக் கூறி வரவழைத்தனர். பின் நான்கு பேரும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட,
அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று பிள்ளைகளும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பின் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.