கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகில் சாஸ்தவட்டோம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்.இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் ஹசீனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த 11 ஆண்டுகளாக ஜாகிர் உசேன் பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்துவந்துள்ளார்.
இதுவரையிலும் 348 பாம்புகளை பிடித்துள்ள ஜாகிர் உசேன், 12 முறை பாம்புகளால் கடிபட்டு உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நாவைகுளம் என்ற பகுதியில் பாம்பு பிடிக்க வருமாறு ஜாகிர் உசேனுக்கு அழைப்பு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தனியாக அந்த பகுதிக்கு சென்ற ஜாகிர் உசேன் பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் இரவு 8.30 மணி அளவில் அந்த பாம்பை பிடித்துள்ளார்..அவ்வாறு பிடிபட்ட விஷத்தன்மை கொண்ட நாக பாம்பை வெறும் கைகளால் பிடித்து ஜாகிர் உசேன் மேலே தூக்கியுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பாம்பு அவரை கடித்துள்ளது. அவரது கையில் இருந்த பாம்பு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.
விஷ பாம்பு சீண்டியதும் சிறிது நேரம் அசராமல் நின்ற ஜாகிர் உசேன், திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்து வாயில் நுரைதள்ள தொடங்கியது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் ஜாகிர் உசேனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ஜாகிர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.