ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயமடைந்துள்ளதால் நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டாரென்றும், அதோடு அணியில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கிறது.
ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்கொண்ட 4 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மும்பை அணியுடன் நடந்த 4 வது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த 4 போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ச னும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு, எடுத்த ரன்கள், 28, 5, 1, 0. சேன் வாட்சன் 0,44, 13, 5. இந்த தொடரில் இவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து சொதப்பி வருவதால், அணியில் சில மாற்றம் இருக்கும் என்று ஏற்கனவே கேப்டன் தோனி கூறியிருந்தார். இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மோதுகின்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சி.எஸ்.கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக முரளி விஜய்-க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அவருடன் பாப் டுபிளெசிஸும் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 ஐ.பி.எல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தமிழக வீரரான முரளி விஜய்க்கு சென்னை அணி வாய்ப்பு வழங்கியது. இந்த முறை அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டியில்மிக சிறப்பாக விளையாடியுள்ளார் என்பதால் அவருக்கு நாளை நடைபெற உள்ள போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு தமிழக அணியான சென்னை அணியில் தமிழக வீரர்கள் யாருமே இல்லாதது சற்று முணு முணுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை போக்கும் விதத்திலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சி.எஸ்.கே அணியில் காயம் காரணமாக லுங்கி நிகிடி, சொந்த காரணமாக டேவிட் வில்லே ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ள நிலையில் ஆல்ரவுண்டர் பிராவோவும் காயமடைந்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லுங்கி நிகிடிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கஜ்ஜலின் சென்னை வந்துள்ளார். அவர் நேற்று அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.