புவனகிரி பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகில் வங்கி ஒன்றின் முதல் தளத்தில் நிதி நிறுவனத்தில், ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கீழ்ப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கடந்த 29ஆம் தேதி இரவு நேரத்தில் இறந்து கிடந்த அந்த பெண் ஒரு நபருடன் அந்த இடத்திற்கு வருவது, முதல் மாடியில் இருந்து ஒருவர் அந்த பெண்ணை அழைத்துச் செல்வதும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் 11 மணிக்கு மேல் அந்த வாலிபர் மட்டும் தனியாக வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. போலீசார் ஆய்வு செய்ததில் அந்த நபர் ஜிஎஸ்டி கணக்கு பாக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் என தெரியவந்தது.
அந்த நபர் சோதியாதோப்பு அருகே தரூர் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் மகன் முரசொலி மாறன். இறந்துபோன அந்த பெண் புதுவை மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி, சத்யா என்பதும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தலைமறைவாக உள்ள முரசொலி மாறனை போலீசார் தேடி வருகின்றனர்.