கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சோகையன் தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தினம்தோறும் நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் போன்ற மீன்களைப் பிடித்து வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கவேலு என்ற மீனவர் தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென படகிலேயே மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த பாக்கியம் என்ற மீனவர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது உடலையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இந்த தகவலை அறிந்த தங்கவேலுவின் உறவினர்கள் கதறி அழுதனர். தேவிபட்டினம் கடலோர போலீசார் மற்றும் ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் ஆகியோர் விரைந்து வந்து மீனவரின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தேவிபட்டினம் கடலோர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.