சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினால் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் தனியார் மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
அந்நிலையில் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதன்பின் மளமளவென பரவத்தொடங்கிய தீ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீ விபத்தில் சிக்கிக்கொண்ட 29 கொரோனா நோயாளிகளை பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த திடீர் தீ விபத்தில் சிக்கி ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர்.
இவர்களில் 5 பேரில் 4 பேர் மூச்சுத்தினரியும் , ஒருவர் தீயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.