கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் திடீர் பயங்கர தீ விபத்தில் மாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தீ விபத்தில் இருந்து, 40 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரும் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மருத்துவமனையில் மீட்பு பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை வெளியே கூடியுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டவர்களின் நிலைமை என்ன ஆகியிருக்குமோ? என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பதட்டத்துடன் வெளியே நின்று கொண்டிருந்த காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.