சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் திடிரென ஆய்வு மேற்கொண்டு கொரோனா கட்டுப்பாடுகளைமீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நகர் பகுதிகளில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் திடிரென ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது முககவசம் அணியாமல் வெளியில் சென்ற பொதுமக்களை அழைத்து முககவசம் அணிந்து தான் வெளிவர வேண்டும் என கூறி சப்-கலெக்டர் எச்சரித்துள்ளார். அதன் பின் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கடைகளில் கூட்டமாக நின்று உள்ளனர்.
இதனை பார்த்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அங்கு இருந்த பொதுமக்களிடமும் கடை உரிமையாளரிடமும் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும் என கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் முழு ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி மதியம் 12 மணிக்கு மேலாக காய்கறி வியாபாரம் செய்கின்ற கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.