அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக உட்கட்சி பூசல்கள் விவகாரத்தில் பாஜக தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பாஜக தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இது நடப்பது போன்று தெரியவில்லை. இதற்கிடையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பொதுவெளியில் பாஜகவை விமர்சித்து பேசுவது பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அதன் பிறகு அண்ணாமலையும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்று முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூறி இருந்தார்.
இதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர்களும் எங்கள் தயவு இல்லாமல் பாஜகவால் ஜெயிக்க முடியுமா என்று பொதுவெளியில் பேசுகிறார்கள். இப்படி பாஜக மற்றும் அதிமுக வார்த்தை மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாஜகவும் தயார் என்பது போல் இருக்கிறதாம். மேலும் இந்த விவகாரம் டெல்லி மேலிடத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.