திருவாரூரில் செல்போனை சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டில் உள்ள தனது அப்பாவுடன் மகள் பேசிய போது திடீரென செல்போன் வெடித்து, இளம் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பலரும் செல்போன் பேசும்போது சார்ஜ் இறங்கி விட்டால் உடனே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.. திடீரென செல்போன் சூடாகி வெடித்து காது கேட்காமலும் போகலாம், உயிருக்கும் ஆபத்து நேரலாம்.. இது போன்ற சம்பவம் உலகின் பல இடங்களில் நடைபெற்றுள்ளதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார்.
இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி, நேற்று காலை தனது தந்தையுடன் மொபைல் போனில் வீடியோ அழைப்பின் மூலம் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், செல்போனில் சார்ஜ் போட்ட படியே பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்தது..
இதனால் செல்போனின் உடைந்த பாகங்கள் ஆர்த்தியின் கண் மற்றும் காதுகளுக்குள் புகுந்தன. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் உடனே சிகிச்சைக்காக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கு முதலுதவிஅளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அனைவரும் செல்போன் பேசும்போது சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவதை தவிருங்கள்..