சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் சுடோக்கு புதிர் விளையாட்டை உருவாக்கியவர் காலமானார்.
சுடோக்கு என்னும் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒன்று. இது எண்களை கொண்டு விளையாடப்படும் புதிர் விளையாட்டு ஆகும். சுடோக்கு என்னும் சொல் ஜப்பானிய மொழியில் “சூ வா டொக்குஷின் நி ககீரு” என்ற தொடரின் சுருக்கமே ஆகும். இதன் பொருள் எண்கள் ஓரிலக்க எண்களாய் இருத்தல் வேண்டும். இந்த சுடோக்கு விளையாட்டை ஜப்பானை சேர்ந்த மகி காஜி என்பவர் உருவாக்கினார். இவர் கெய்லோ பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பின்பு 1986 ஆம் ஆண்டு நிகோலி நிறுவனத்தை தொடங்கினார். அதில் இந்த புதிய விளையாட்டுகளை உருவாக்கினார்.
மேலும் அதன் தலைமை நிர்வாகியாக கடந்த ஜூலை மாதம் வரை பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சுடோக்கு புதிர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒரு ஆண்டிற்குள் 100 நாடுகளில் உள்ள சுமார் 20 கோடி மக்களை கவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சுடோகு மாணவர்களின் புத்திக் கூர்மையையும் அவர்களின் திறமையையும் வெளிப்படுத்தும் விளையாட்டாக உள்ளது.