சுடுகாடுக்கு செல்வதற்கான பாதையை அமைத்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு ஒதுக்கப்படாததால் ஏரிக்கரையை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்குப் சென்று வர போதிய பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களை கொண்டு செல்ல பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தொட்டிமேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறுதி மரியாதை செய்து ஏழுமலையின் சடலத்தை வயல்வெளி வழியாக 1 1/2 கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் தூக்கிச்சென்று ஏரிக்கரையில் அடக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் தங்களுக்கு தனி சுடுகாடும், அதற்கு சென்றுவர பாதையும் அமைத்து தரும்படி மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர்களின் மன வேதனையை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனியான சுடுகாடு மற்றும் செல்லும் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.