பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார்
தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையாகும். அந்நாளில் மக்கள் புத்தாடை அணிந்து அரிசியை பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபடுவர். இப்பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது கரும்பு ஆகும். தற்போது இக்கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகளும் வியாபாரிகளும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்படுகிறது ஆனால் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு காரணமாக இந்த ஆண்டு கரும்பு சாகுபடியானது குறைந்த அளவே உள்ளது. மேலும் புரவி புயல் காரணமாக அதிகளவு மழை பெய்ததால் சாகுபடி செய்த கரும்புகள் சாய்ந்தன.
இதனைஅடுத்து தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு வழங்குவதாக கூறியுள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்வதற்காக அதிகாரிகளும், வியாபாரிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை ரூபாய் 10 கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை ரூபாய் 15க்கு மேல் கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்த கரும்புகளை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வரவு கோட்டை பகுதியில் உள்ள ஒரு விவசாயி தனது வயலில் ஒரு கரும்பின் விலை ரூபாய் 20 என பேனர் வைத்துள்ளார். இதனை பற்றி அவ்விவசாயி வினோத் கூறுகையில் தான் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்ததாகவும், அங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தான் கரும்பு சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வியாபாரிகளும் அதிகாரிகளும் ஆர்வம் காட்டிய போதும் கொள்முதல் விலையானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே தான், தனது வயலில் ரூபாய் 20 க்கு ஒரு கரும்பு என பேனர் வைத்ததாகவும் அவ்வாறு விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு சாகுபடி மிகவும் குறைவாக உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலையானது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.