பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரோய வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது.
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
பொங்கல் பரிசாக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு அதனை விற்க வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக கரும்பு விவசாயிகள் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத ஒரு சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டி கடந்த 24ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதனை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.