பாகிஸ்தானில் சுகர்ஃப்ரீ மாம்பழங்கள் நீரழிவு நோயாளிகளும் உண்ணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் பங்கனபள்ளி, அல்ஃபோன்சா, மல்கோவா என பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனி சுவையை கொண்டுள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளதால் ஜூஸ், மில்க்சேக், ஐஸ்கிரீம் என அனைத்திலும் மாம்பழமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதேசமயம் மாம்பழத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் அதை சாப்பிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்து வந்தது.
எனவே பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து யோசித்து சுகர் ஃப்ரீ பழவகைகளை அந்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானில் சுகர்ஃப்ரீ மாம்பழங்கள் சிந்து பகுதியில் செயல்பட்டு வரும் எம் எச் பன்வார் பார்ம்ஸ் பண்ணையை சேர்ந்த மாம்பழ நிபுணர் குலாம் சர்வார் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாம்பழங்களுக்கு க்ளென், சோனாரோ, கீட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய குலாம் சர்வார், சவுன்ஸ் மற்றும் சிந்தூரி போன்ற மாம்பழ வகைகளில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை உள்ளதாகவும், தங்கள் பண்ணையில் உள்ள மாம்பழங்களில் 4 முதல் 5 சதவீதம் வரை சர்க்கரை அளவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் க்ளேன் வகை மாம்பழங்களில் 5.6 மற்றும் 6 சதவீதம் சர்க்கரை அளவும், கீட் வகை மாம்பழத்தில் 4.7 சதவீதம் மட்டுமே சர்க்கரை அளவு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தான் சந்தைகளில் இந்த மாம்பழங்கள் ரூ.150 என்ற விலையில் ஏழைகளும் வாங்கி உண்ணும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.