Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் விளையாட்டு … ”மாஸ் காட்டிய இளைஞர்கள்”… சுகந்தலையில் கொண்டாட்டம் …!!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுகந்தலையில் விளையாட்டுப் போட்டி உற்சாகமாக நடந்து முடிந்தது.

தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் புதுஆடை அணிந்து , வீடுகளில் கோலம் போட்டு , பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டு பொங்கலையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தி அன்றைய நாளை உற்சாகத்துடன் போக்குவார்கள்.

 

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக அங்குள்ள EVLK இளைஞரணி சார்பில் திட்டமிடப்பட்டது. விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து சண்முகராஜ் , கார்த்திக் ,பிரகாஷ் ,மாடசாமி ,சஞ்சய் ,மாரிகணேஷ் விழா ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். இதற்காக ஊரின் மையப்பகுதியில் உள்ள கோவில் மைதானம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது.

வண்ணவண்ண கலர்களால் ஜொலித்த விளையாட்டு திடல் அங்குள்ள அனைவரையும் பிரமிக்க வைத்தது. சரியாக மதியம் 2 மணிக்கு தொடங்கி 30_க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்று சிறுவர்கள் , மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்று தங்களின் தனி திறனை வெளிப்படுத்தினர்.

குழந்தைகளுக்கென்று கோலிக்குண்டு பொறுக்குதல்  , பலூன் உடைத்தல் , சாப்பாட்டு போட்டி என பட்டியல் நீண்டுகொண்டு சென்ற நிலையில் இளைஞர்கள் பங்கேற்ற மியூசிக் சர் , பானை உடைத்தல் , சைக்கிள் ஸ்லோவ் ரேஸ் என போட்டி வரிசைகட்டி இருந்தன.

ஆண்களுக்கு எவ்வளவு போட்டி நடத்தப்பட்டதோ அதே அளவில்  பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. ஊசியில் நூல் கோர்த்தல் , பாட்டிலில் நீர் நிரப்புதல் , ஸ்பூனில் எலுமிச்சை கொண்டு வருதல் என பெண்களுக்கும் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியாளர்களாக தடம் பதித்தனர்.

6 மணி நேரம் வரை நடந்த விளையாட்டு போட்டிகள் பானை உடைத்தலோடு நிறைவு பெற்றது. பின்னர் சுகந்தலை ஊர் நிர்வாகம் சார்பில் கன்னிதுரை ( ஊர் தலைவர் ) , மோகன் ( ஊர் பொருளாளர் ), இசக்கிமுத்து ( வருவாய்த்துறை ) , செல்வராஜ் (Business ) பாலகிருஷ்ணன் ( நெடுஞ்சாலைத்துறை ) சரவணன் ( BHEL) ஆகியோர் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைவரையும் உற்சாகப்படுத்தக் கூடிய வகையில் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டு மற்றும் பரிசளிப்பு நிறைவு பெற்ற தருணத்தில் நல்ல முறையில் விளையாட்டு போட்டி நடத்தி முடித்த EVLK இளைஞரணி ஒருவரை ஒருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

அதே போல இறுதியாக அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்த நிகழ்வு மீண்டும் இதே போல் விளையாட்டுப் போட்டியை உற்சாகமுடன்  நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவித்ததாக விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |