சுகாதாரமற்ற முறையில் ‘ஷவர்மா’ விற்பனை செய்த ஓட்டல்களில் 133 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு ‘ஷவர்மா’ சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஓட்டல்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் மாவட்டம் முழுவதும் சுகாதாரமான முறையில் ‘ஷவர்மா’ உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு நடத்தினர்.
மேலும் சேலம் மாநகரத்தில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் அயோத்தியாபட்டினம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, எடப்பாடி பனமரத்துப்பட்டி உள்ளிட்ட 13 பகுதிகளில் உள்ள 113 அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 19 ஓட்டல்களில் கெட்டுப்போன கோழி இறைச்சி, மீன், நண்டு, ஆட்டு இறைச்சி போன்றவைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டல்களில் சுமார் 35 ஆயிரம் மதிப்புள்ள 113 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை விற்பனை செய்த 8 ஓட்டல்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதமும், 22 ஓட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.