கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்து பாராட்டியுள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு சீகம்பட்டி கிராமம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பபூசி செலுத்தி செல்கின்றனர். எனவே சீக்கம்பட்டு கிராமத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 715 பேர் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இவ்வாறு கொரோனாவின் தாக்கத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்றும் நோக்கில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வரும் மருத்துவ குழுவினருக்கு கிராம மக்கள் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் சீர்வரிசை கொடுத்து கவுரவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறும்போது, சீக்கம்பட்டு கிராமத்தில் முன்பு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு அச்சம் தெரிவித்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்ததை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதன்பின் கிராம மக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இவ்வாறு தமிழகத்திலேயே சீக்கம்பட்டு கிராமத்தில் மட்டும் தான் முதன்முதலாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.