தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த கால தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட இந்த ஆண்டு கூடுதலான வாக்குகள் பதிவாகும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேர்தலின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செலவு கணக்கு கண்காணிப்பு குழுவினர் பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து கணக்கீடு செய்ய வேண்டுமெனவும், வேட்பாளர்கள் தனியாக வங்கி கணக்கு தொடங்கி தேர்தல் செலவுகளை அதன் மூலமே செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் செலவு செய்யப்படும் தொகை குறித்து செலவு கணக்கு கண்காணிப்பு குழுவினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் எனவும், புகார்கள் குறித்து நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.