விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் பகுதியில் தேவராயன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் வானாதிராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகில் மது போதையில் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவராயனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் விஷம் குடித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.