கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் ஞானவேல் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் ஞானவேல் முருகனுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கடந்த 26ஆம் தேதி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சையில் இருந்த போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 2ஆம் தேதி சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.