மகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அலங்கியம் பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் காளிதாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு வர்ஷா என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காளிதாஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இதனால் பூங்கொடி அலங்கியம் காமராஜர் நகரில் உள்ள தனது தாய் சரஸ்வதி வீட்டில் தனது மகள் வர்ஷா உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தற்போது பூங்கொடி சலவைத்தொழில் செய்து வந்துள்ளார். மேலும் பூங்கொடி கணவர் இறந்ததிலிருந்து குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பூங்கொடி கணவரின் நினைவு நாள் வந்துள்ளது. அதிலிருந்து பூங்கொடி மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சரஸ்வதி கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூங்கொடியும் வர்ஷாவும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.
அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து அலங்கியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாய்-மகள் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதலில் வர்ஷாவை தூக்கில் தொங்கவிட்டு அதன்பின் பூங்கொடி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.