ஆம்னி பஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதியில் பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமஜெயம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜிதா, சுஜிதா என்ற 2 மகள்களும், ரஞ்சன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில் பாஸ்கர் வீட்டில் உள்ள ஆதார் கார்டு, போட்டோ ஆகியவற்றை கிழித்து எரித்துள்ளார். இதனால் கோபமடைந்த ராமஜெயம் குழந்தைகளுடன் மேலமங்களக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பாஸ்கர் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
மேலும் பாஸ்கர் குழந்தைகள் உடனே வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என ராமஜெயத்திடம் தெரிவித்துள்ளார். இதனால் ராமஜெயம் குழந்தைகளுடன் ஏரலில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் பாஸ்கர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.