விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். செல்வகுமார் தனது இரண்டாம் ஆண்டு இளங்கலைப் படிப்பை குரும்பலூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனை அறிந்த செல்வகுமாரின் தந்தை செந்தில்வேல் அவரை கல்லூரிக்கு செல்லுமாறு கோபத்தில் கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவன் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பயிருக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். அதை கண்ட செந்தில்வேலின் உறவினர்கள் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அவர் அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.