குருணை மருந்தை சாப்பிட்டு மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் மத்திமான்விளை பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இவர் சைக்கிள் கடை வைத்து வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால் இவர் கடன் வாங்கி குடும்பம் நடத்தியுள்ளார். மேலும் இவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழன் கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மகேந்திரன் குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அப்போது வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்க்கு வந்த தனது மனைவியிடம் குருணை மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து சுசீலா 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து திருச்செந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.