வாடிக்கையாளர் திட்டியதால் பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நளினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் சசிக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் பால் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு பால் விற்பனைக்கு சென்றபோது சசிகுமாருடன் வேறு ஒரு நபரும் சென்றுள்ளார். அவர் அங்குள்ள ஒரு வீட்டிலிருந்து கயிற்றை திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியை கண்ட குடியிருப்பு நபர் ஒருவர் சசிகுமாரை அனைவரின் முன்பும் மோசமாக திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சசிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் சசிக்குமாரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.