திண்டுக்கல்லில் உடல்நலக்குறைவால் மனவேதனை அடைந்த பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யாபட்டி பகுதியில் பூங்கோதை என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த பூங்கோதை தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களுக்கும் சென்று அவரை தேடி பார்த்துள்ளனர்.
ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பூங்கோதை உடல் மிதப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர் பூங்கோதையின் பிரேதத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.