கல்குவாரியில் வேலை செய்யும் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்திலுள்ள போகம் கிராமத்தைச் சார்ந்தவர் சுந்தர். இவர் கல்குவாரியில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். சுந்தருக்கு உறவினரான தமிழ்வாணனும் அதே இடத்தில் வேலை செய்வதனால் இருவரும் உத்திரமேரூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக சுந்தருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்வாணன் மட்டும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. அதனால் அவர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது சுந்தர் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.