நாகப்பட்டினத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரதாபராமபுரம் வடக்கு தெருவில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். அமிர்தலிங்கம் சம்பவத்தன்று அடகிலிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை வங்கியிலிருந்து மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அதன் பின் மாலையில் அவரது மனைவி மீட்டு வந்த அரைஞான் கயிற்றை கேட்டுள்ளார். அதற்கு அமிர்தலிங்கம் சட்டைப்பையில் இருப்பதாக கூறியுள்ளார். சட்டைப்பையில் தேடி பார்த்த போது அரைஞான் கயிற்றை காணவில்லை.
இதனால் அமிர்தலிங்கம் மனவேதனை அடைந்துள்ளார். இதையடுத்து வீட்டின் அருகில் இருந்த மரத்தில் அமிர்தலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் அமிர்தலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்ட வேம்பு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அமிர்தலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீழையூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.