தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியை மிரட்டியவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்புரம் பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்யும் மணிகண்டன் அவரை மிரட்டுவதற்காக அடிக்கடி தூக்கு போட்டு தற்கொலை செய்வது போல மிரட்டியுள்ளார். இவ்வாறு சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்போவதாக தனது மனைவியை மிரட்டிய போது, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தை இறுக்கி விட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கணவரின் உயிரை காப்பாற்றி உள்ளார். அதன் பிறகு சரஸ்வதி மணிகண்டனுக்கு தண்ணீர் கொடுத்து அவரை தூங்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் மணிகண்டன் எழுந்திருகாததால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி அவரை உடனடியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மணிகண்டனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போத்தனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.